நாமக்கல்: வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கியுள்ளதால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
நவ., 1ல் முட்டை கொள்முதல் விலை, 455 காசாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, 5ல், 465; 10ல், 470; 15ல், 160; 20ல், 465; 25ல், 450 என, ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. நேற்று ஒரே நாளில், 15 காசு உயர்ந்து, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: இரண்டு வாரங்களாக வடமாநிலம், வெளிநாட்டுக்கு முட்டை அனுப்புவதும், ஏற்றுமதி செய்வதும் தடைபட்டது. கடந்த ஒரு வாரமாக அங்கு முட்டை விற்பனைக்கு அனுப்புவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு வாரத்தில் மட்டும், 1.50 கோடி முட்டை அனுப்பப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். தற்போது குளிர்காலம் துவங்கிள்ளதால் நுகர்வு அதிகரித்துள்ளது. தினமும், 20 லட்சம் முட்டை அனுப்பப்படுகிறது. மேலும் மழை காரணமாக முட்டைகளை அடுக்கி வைக்க அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை அனுப்ப முடியாத நிலை உள்ளது. ஒரு மாதத்தில் நிலைமை சீராகி அதிக அளவில் முட்டை அனுப்பப்படும். முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.