கரூர்: ''கரூர் மாவட்டம் முழுவதும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட காவல் துறை, வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில், 100 'சிசிடிவி' கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: வணிகர்கள் நலனில், முழு அக்கறையுள்ள முதல்வராக ஸ்டாலின் உள்ளார். திருப்பூருக்கு அடுத்தபடியாக ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு கரூர் உள்ளது. அதை, 25 ஆயிரம் கோடியாக, அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வணிகர்களுக்கு விரைவாக, மின் இணைப்பு; கரூர் மாவட்டம் முழுவதும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கலெக்டர் பிரபு சங்கர், எஸ்.பி., சுந்தர வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.