புவனேஷ்வர்-காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்று கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 3ம் தேதி புயலாக வலுப்பெற்றது. அதற்கு 'ஜாவத்' என, பெயரிடப்பட்டது. இந்த புயல் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கி ஒடிசாவின் புரி அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எனினும் நேற்று முன்தினம் மாலை ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதையடுத்து ஒடிசாவை நோக்கி நகரத் துவங்கியது. இந்நிலையில் ஒடிசாவின் புரி கடற்கரையை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கடந்தது.
இதன் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. கஞ்சம், புரி, கேந்திரபாரா, ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா கரையை கடந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் இந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இதற்கிடையே மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.மாநிலத்தில் நிலவும் சூழலை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.