இந்திய நிகழ்வுகள்
தமிழக நிகழ்வுகள்
சிவகாசி அருகே பஸ் மோதி இருவர் பலி
சிவகாசி-சிவகாசி அருகே டூவீலரில் அரசு பஸ் மோதியதில் இருவர் பலியாகினர்.சிவகாசி பேர்நாயக்கன்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் அட்டை கம்பெனி தொழிலாளி குமார் 31. இதே பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பொன்னு பாண்டியன் 25. இருவரும் நேற்றிரவு 7:30 மணிக்கு டூவீலரில் மது போதையில் 'ஹெல்மெட் அணியாமல் சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது சிவகாசியில் இருந்து ஏழாயிரம்பண்ணை சென்ற சித்து ராஜபுரம் ராதாகிருஷ்ணன் 50, ஓட்டிய அரசு பஸ், சித்துராஜபுரம் சசி நகர் அருகே சென்றபோது டூவீலரில் மோதியது. இதில் பொன்னுபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார், சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
விசாரணைக்கு சென்ற கல்லுாரி மாணவர் சாவு போலீசை கண்டித்து முதுகுளத்துாரில் மறியல்
முதுகுளத்துார்--முதுகுளத்துார் அருகே, போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லுாரி மாணவர் வீட்டில் உயிரிழந்தார்.
போலீஸ் தாக்கியதில், அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணகுமார் மகன் மணிகண்டன், 21; கோட்டைமேடு அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர் நண்பர்கள் இருவருடன், நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பரமக்குடியில் இருந்து கீழத்துாவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால், போலீசார் விரட்டியதில் இருவர் இறங்கி தப்பினர். மணிகண்டனை மட்டும் விசாரணைக்கு ஸ்டேஷன் அழைத்து சென்று, இரவு 7:30 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மணிகண்டன் உயிரிழந்தார்.
போலீசார் தாக்கியதில் தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி, முதுகுளத்துார் - பரமக்குடி சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர்.மணிகண்டன் தம்பி அலெக்ஸ் கூறுகையில், ''வீட்டிற்கு வந்த மணிகண்டன், தன்னை போலீசார் தாக்கியதாக கூறினார். போலீசார் அடித்ததில் தான் மணிகண்டன் உயிரிழந்தார். எனவே எஸ்.பி., விசாரணை செய்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்காக மணிகண்டன் வந்து செல்லும் 'சிசிடிவி' பதிவுகள் உள்ளன. 'பிரேத பரிசோதனை முடிவு வந்த பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். மணிகண்டன் பிறந்த நாளில் உயிரிழந்தது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ராமநாதபுரம்--சக ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ராமநாதபுரம் அருகே, சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடம் நடத்தியவர் சந்திரன், 52. இவர், சக ஆசிரியைக்கு ஆபாச செய்திகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.புகாரின்படி, சத்திரக்குடி போலீசார் சந்திரனை கைது செய்து, பரமக்குடி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சந்திரனை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உத்தரவிட்டுள்ளார்.
வீடுகளில் கைவரிசை: 'பலே' ஆசாமிகள் கைது
திருப்பூர்:தாராபுரத்தில் வீடுகளில் கைவரிசை காட்டி வந்த, 'பலே' ஆசாமிகளை கைது செய்து டூவீலர், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தாராபுரம், காந்தி நகர் - அலங்கியம் ரோட்டை சேர்ந்தவர் குபேந்திரன், 24. இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த டூவீலர் மாயமானது. வீட்டுக்குள் இருந்த, நான்கு மொபைல் போன்கள் திருட்டு போனது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக, தனிப்படை போலீசார், இருவரை பிடித்து விசாரித்தனர். மதுரையை சேர்ந்த யாசின் முகமது, 24 மற்றும் சென்னையை சேர்ந்த அசோக், 24 என்பது தெரிந்தது. இருவரும் திருட்டில் ஈடுபட்டனர். திருப்பூருக்கு வந்த அசோக்குக்கு, யாசின் முகமது உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மதுரைக்கு செல்லும் வழியில், திருட்டில் ஈடுபட்டனர். யாசின் முகமது மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.