புதுச்சேரி ; 'பொது இடங்களுக்கு வருவோர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்' என, தொற்று பரவல் தடுப்புச் சட்டம் புதுச்சேரியில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியை நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாக மாற்ற அரசு முனைப்பு காட்டி, சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.இதனால் மாநிலத்தில் இதுவரை 7,74,454 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4,89,078 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனர்.
இருந்தும், 2 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது உலக முழுதும் உருமாறிய 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா என இதுவரை 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடாமல் இருப்பதால் இவர்கள் மூலம் கொேரானா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தடுக்க, கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என, புதுச்சேரி சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் கொரோனா தொற்றை தடுக்கவும், நுாறு சதவீதம் தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்றவும் அரசு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.புதுச்சேரியில், 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் பலர் முன்வராததால், கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது
புதுச்சேரி பொது சுகாதார சட்டம் -1973, பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது.மீறி வெளியே நடமாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.எந்தெந்த பொது இடங்களில், தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்பது குறித்து அரசு முடிவு செய்து, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது