கோத்தகிரி:கோத்தகிரி அருகே, வனத்துறை ஜீப் கவிழ்ந்த விபத்தில், வனவர் உட்பட, மூவர் காயமடைந்தனர்.கோத்தகிரி அருகே, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட, உயிலட்டி பகுதியில், வனத்துறையினர் கூண்டு வைத்து, கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வனவர் பெலிக்ஸ் தலைமையில், வன ஊழியர்கள் ஜீப்பில் சென்று, கரடி நடமாட்டத்தை கண்காணித்து பிறகு கோத்தகிரிக்கு திரும்பியுள்ளனர்.அப்போது, பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில், திடீரென காட்டெருமை சாலையை கடந்து சென்றுள்ளது. ஜீப்பை நிறுத்த டிரைவர் 'பிரேக்' போட்டபோது, எதிர்பாராத விதமாக, ஜீப் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், வனவர் பெலிக்ஸ், ஜீப்பை இயக்கிய வேட்டை தடுப்பு காவலர் கவுதம் மற்றும் வனக்காப்பாளர் சைமன் ஆகியோர் காயமடைந்தனர். அவ்வழியாக வந்தவர்கள், மூவரையும் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால், கோத்தகிரி - கூக்கல்தொரை வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.