கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் மலைவாஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ.,ல் ஆயிரத்து 600 மீட்டர் உயரம், 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால் சிறுமலையை அடையலாம். எந்நேரமும் குளுமைக்கு பஞ்சம் இருக்காது.சுற்றுலா பயணிகளை கவர தற்போது தென்மலையில் ரூ.5 கோடியில் வனத்துறை சார்பில் 20 ஏக்கரில் 'பல்லுயிர் பூங்கா' அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பட்டாம் பூச்சி பூங்கா, குழந்தைகள் பூங்கா, அரிய மூலிகை, தாவரங்கள் தோட்டம், நடைபாதை, உயரமான இடத்தில் இருந்து வனப்பகுதியை பார்த்து ரசிக்க உயர் கோபுரம் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
பயணிகள் எதிர்பார்ப்பு
இத்திட்டத்திற்கு கடந்தாண்டு ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது மரக்கிளைகள் போன்ற நுழைவு வாயில், நடைபாதை, உயர் கோபுரம், பூச்செடிகள், காவலாளி அறை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பணிகள் முழுமை பெறாததால் பூங்காவிற்குள் யாரும் செல்ல முடியாதபடி கம்பி வேலி அமைத்துள்ளனர். இங்கு வருவோர் பூங்கா வெளியே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பூங்கா எப்போது தான் பயன்பாட்டிற்கு வருமோ என்ற ஏக்கத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், ''இந்தாண்டு பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான நிதி ரூ.1.25 கோடி வர வேண்டும். அந்நிதி வந்ததும் மீதமுள்ள பணிகளை முடித்து விரைவில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்'' என்றார்.