நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் வராததற்கு பொதுப்பணித்துறையின் அலட்சியமே காரணம் என விவசாயிகள் புலம்புகின்றனர்.
நிலக்கோட்டை சீதாபுரம், குளத்துப்பட்டி, கொங்கர்குளம் மன்னவராதி, சிலுக்குவார்பட்டி, எத்திலோடு, ஆவரம்பட்டி, மட்டப்பாறை கண்மாய்களுக்கு ஆத்தூர் குடகு மலையில் இருந்து வரும் பெரியாறு மூலம் தண்ணீர் கிடைக்கும். இத் தண்ணீர் கன்னிமார் கோயில் அருகே ராஜவாய்க்கால் மற்றும் ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு பிரிக்கப்படுகிறது.கடைமடை பகுதியான நிலக்கோட்டைக்கு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் ராஜவாய்க்கால் சிமென்ட் வாய்க்கால் ஆக மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறை செவிமடுக்கவில்லை.
அதைவிடுத்து புதர்களை அகற்றுதல் போன்ற சிறு வேலைகளை மட்டுமே செய்தன. மாவட்டம் முழுவதும் சராசரிக்கும் அதிகமாக மழைபெய்தும் கால்வாயை சரி செய்யாததால் குளத்துப்பட்டி, மன்னவராதி, சிலுக்குவார்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.மேலும் நரசிங்கபுரம் தாமரைக்குளம் கரை, அதற்கு மேல் பகுதியில் உள்ள வாய்க்கால் கரை என இரு இடங்களில் வலுவிழந்து உள்ளதால் அதிக நீரை கன்னிமார் கோவிலில் இருந்து எடுக்கமுடியவில்லை. மூன்றில் ஒரு மதகு மூலமாக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது. மூன்று மடையை திறந்தால் மட்டுமே கடைமடை நிலக்கோட்டைக்கு தண்ணீர் கிடைக்கும்.
மன்னவராதி, சிலுக்குவார்பட்டி கண்மாய்களுக்கு செம்பட்டி புல்வெட்டி கண்மாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதற்குப்பின் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்திற்கு உயிரூட்டினால் விவசாயிகள் பெருமளவில் பயன் அடைவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல பணப் பயிர்கள் விளைவிக்க முடியும். வரும் காலங்களிலாவது பொதுப்பணித்துறையினர் கன்னிமார் கோயிலிலிருந்து ராஜவாய்க்காலை சிமென்ட் ஆகவும், கரைகளை உயர்த்தியும் தண்ணீர் கிடைக்க வழி செய்யவேண்டும்.