சிவகங்கை : சிவகங்கையில் வேளாண், சட்டக்கல்லுாரி துவக்க கோரி டிச., 11 ல் கடையடைப்பு நடத்த வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் தனியார் மகாலில் நடந்து. தலைவர் அறிவுத்திலகம் தலைமை வகித்தார். செயலாளர் வடிவேல்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக்கல்லுாரி, வேளாண் கல்லுாரி அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 14 வகையான கோர்ட் செயல்படுகின்றன.
மாவட்ட நீதிமன்றமும் சட்டக்கல்லுாரியும் ஒரே இடத்தில் இருந்தால் தான் சட்டம் படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.பழைய நீதிமன்ற வளாகம் சட்டக்கல்லுாரி அமைக்க போதுமானதாக இருக்கும். சிவகங்கை நகரில் தான் சட்டக்கல்லுாரி அமைக்கப்பட வேண்டும். சிவகங்கை பகுதியில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு நறுமணப்பூங்கா அமைக்கப்பட்டது. இன்று வரை எதற்காக துவக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
வேளாண் கல்லுாரி இப்பகுதியில் அமைந்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் செழிப்படையும். கல்லுாரிக்கு தேவையான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. விவசாயக்கல்லுாரி சிவகங்கையில் அமைக்க வேண்டும்.சட்டக்கல்லுாரி, வேளாண் கல்லுாரியை சிவகங்கையில் அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி டிச., 11 ல் ஒரு நாள் கடையடைப்பு செய்யப்படவுள்ளது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.