மதுரை : மதுரையில் பள்ளி மாணவரை கடத்தி ரூ.30 லட்சம் பறிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவரிமான் செல்வரத்தினம் டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்துள்ளார். இவரது 16 வயது மகன் பழங்காநத்தம் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். துவரிமானில் இவரை ஆட்டோவில் சென்ற இருவர் வலுக்கட்டாயமாக கடத்த முயன்றனர். மாணவர் சத்தமிட்டதால் மக்கள் திரளவும் அவரை விட்டு விட்டு இருவரும் தப்பினர்.
நாகமலைபுதுக்கோட்டை போலீசில் செல்வரத்தினம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையில் துவரிமான் செந்தில் கண்ணன், ஆட்டோ டிரைவர் சரவணன் மாணவரை கடத்தி ரூ.30 லட்சம் பறிக்க திட்டமிட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்புடைய விருதுநகர் மலைச்சாமியை தேடுகின்றனர்.