அந்தியூர்: ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர், ஏரியில் பிணமாக மிதந்தார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அந்தியூர் அருகே கெட்டிசமூத்திரம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன், 58; ஈரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலக ஆர்.எம்.ஓ.,வாக பணிபுரிந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, மகன், மகள்களுடன் இப்பகுதியில் வசித்தார். குடிப்பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கெட்டிசமூத்திரம் ஏரியில் கண்ணன் சடலம் நேற்று மதியம் மிதந்தது. அந்தியூர் போலீசார் உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சாவுக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.