சேலம்: டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரை தாக்கி, மொபைல், பணம் பறித்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், தாதகாப்பட்டி, பொம்மசெட்டி காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; அன்னதானப்பட்டி, வேலு நகரில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, வாடகை காரில் மதுக்கடைக்கு வந்தார். அப்போது, கடைக்கு செல்லும் வழியில் மூன்று பேர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். வேறு இடத்துக்கு செல்ல, செந்தில்குமார் அறிவுறுத்தினார். அதில் ஆத்திரமடைந்த மூவரும், செந்தில் குமாரை தாக்கி, அவரிடம் இருந்த, 5,000 ரூபாய், மொபைல் போனை பறித்தனர். அப்போது, கார் டிரைவர் சுப்ரமணியன் தடுக்க முயன்ற நிலையில், அவரையும் கும்பல் தாக்கியது. இதனால், காயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செந்தில்குமார் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், தாதகாப்பட்டியை சேர்ந்த சங்கர், 28, ரமேஷ், 40, தியாகராஜன், 31, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மொபைல், பணத்தை மீட்டனர்.