வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் தொடர்மழை காரணமாக செங்கல் சூளை தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதமாக வேலையிழந்துள்ளனர்.வெள்ளகோவில் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த இரண்டு மாதமாக தொடர் மழை காரணமாக செம்மண் மற்றும் களிமண் கலந்த கலவையிலான செங்கல் அச்சில் கற்கள் அறுக்க முடியவில்லை.தயாரிக்கப்பட்ட கற்களை சுத்தம் செய்து ஏழு நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் சூளையில் அடுக்க வேண்டும். வெயில் அதிகமாக இல்லாததால் கற்கள் காயவைக்க முடியவில்லை. இதனால் சூளை வைப்பதில் மாதக்கணக்கில் இழுபறி ஏற்படுகிறது.தற்போது கைச்சூளையில் சுடப்படும் செங்கற்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் செங்கற்கள் கட்டட பணிகளுக்கு கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். ஒரு செங்கல், 6 -7 ரூபாய் என விற்ற நிலையில், கடந்த மூன்று மாதமாக 8 - 9 ரூபாய் என தரத்திற்கேற்ப விற்பனையாகிறது.தொழிலாளர்கள் கூறியதாவது:செங்கல் அறுக்கும் தொழிலில், வேலை பார்த்து வருகிறோம். இரண்டு மாதமாக தொடர் மழையால், வேலையின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. எனவே, எங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.