திருப்பூர்:தாராபுரம், மொந்தநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராணி, இவரது கணவர் குழந்தைவேல், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.இவருக்கு, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், தவறுதலாக இறப்பு சான்று வழங்கியதால், எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லையென, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க முறையிட்டார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:எனது கணவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு இடமில்லை என்று கூறி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில நாட்களுக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இறப்பு சான்றிதழில், 'நிமோனியா' காய்ச்சல் பாதிப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.கொரோனாவால் கணவர் இறந்ததால், எவ்வித வருமானமும் இல்லாமல் குடும்பம் பரிதவிக்கிறது. விவசாயக்கடனும் உள்ளது. சொந்த வீடோ, நிலமோ இல்லை. எனவே, கணவருக்கு கொரோனா பாதிப்புக்கான இறப்பு சான்று வழங்கி, நிவாரண உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.