பண்ருட்டி-பண்ருட்டி அருகே 2000 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம், உளுந்தாம்பட்டு ஊராட்சி எல்லையில் தென்பெண்ணை ஆறு உள்ளது. ஒரு மாதமாக பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வற்றத் துவங்கியுள்ளது. தென்பெண்ணையின் மேற்பரப்பில் பண்ருட்டி அடுத்த காவனுாரைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், வரலாற்று ஆர்வலர்கள் மோகன், ரவீந்தர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர் . இதில் 2000 ஆண்டுகள் பழமையான சங்க கால பொருட்களான சுடுமண் உருவ பொம்மைகள், வட்டச் சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், உடைந்த அகல் விளக்கு, சிதைந்த உறை கிணறுகள் கிடைத்தன.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:தென்பெண்ணை ஆறு எனதிரிமங்கலம், உளுந்தாம்பட்டு ஆகிய கிராம எல்லையில் வெள்ளப் பெருக்கில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் வித்தியாசமான பானை ஓடுகள் உள்ளதாக அப்பகுதியினர் கூறினர். அங்கு சென்று ஆய்வு செய்தோம்.ஆற்றின் மேற்பரப்பில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண்ணால் ஆன இரண்டு மனித உருவங்கள், சுடு மண் மிருக உருவம், பழங்கால வாழ்க்கை முறையில் பொழுது போக்கிற்கு சிறுவர்கள் விளையாடிய வட்ட சில்லு, உடைந்த அகல் விளக்குகள் கிடைத்தன. சிதைந்த உறை கிணறு, சுடுமண் புகை பிடிப்பான், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுத்தோம். இதில் சுடு மண் உருவம் மனித குலத்தின் மிக பழமையான கலை வடிவம். இது கல், மரம், உலோகம் போன்ற கலை வடிவங்கள் வருவதற்கு முன்பாகவே தோன்றியது.மனித உருவத்தில் உள்ள சுடு மண்ணில் ஒரு பெண் உருவம் அழகிய காதணியுடன் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு சிற்பம் சிதைந்துள்ளது. இதற்கு முன் சுடுமண் உருவங்கள் கீழடி, பூம்புகார் பகுதிகளில் தமிழக அரசு அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இதன் மூலம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என தெளிவாக அறிய முடிகிறது. இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறினார்.