பவானிசாகர், புளியம்பட்டியில் விடியவிடிய கொட்டிய கனமழை: தரைப்பாலம் மூழ்கியது; விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது | ஈரோடு செய்திகள் | Dinamalar
பவானிசாகர், புளியம்பட்டியில் விடியவிடிய கொட்டிய கனமழை: தரைப்பாலம் மூழ்கியது; விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2021
09:55

பவானிசாகர்: பவானிசாகர் அருகே விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால், போக்குவரத்து பாதித்தது.

பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, கனமழை பெய்தது. இதனால் சத்தி - மேட்டுப்பாளையம் சாலையில், மாரனூர் பிரிவு அருகே, தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதே பகுதியில் வயல்களில் தேங்கியதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இரவு முதல் காலை வரை பெய்த கனமழையால், பவானிசாகர் சுற்றுவட்டார மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழையால் நிரம்பிய தடுப்பணைகள்: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை பெய்தது. புளியம்பட்டி, புங்கம்பள்ளி, சாணார்பதி, விண்ணப்பள்ளி, குரும்பபாளையம் கிராம பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால், ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கன மழையால் ஐந்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பின. தடுப்பணைகளில் இருந்து உபரி நீராக வெளியேறிய செந்நிற மழைநீர், விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. கிராமப்புற சாலைகளில் வெள்ளமாக ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வீடு இடிந்து சேதம்: புன்செய்புளியம்பட்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 60; விவசாயியான இவர் ஓட்டு வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் ஒருபக்க மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லை. வருவாய் அதிகாரிகள் வீட்டை ஆய்வு செய்தனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X