சேலம்: சேலத்தில், தி.மு.க., கொடி கம்பி குத்தி மூக்குடைந்த சிறுமி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் வரும், 11ல் சேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். வரவேற்பு அளிப்பது உட்பட விழா ஏற்பாடுகளை, அமைச்சர் நேரு சேலத்தில் முகாமிட்டு செய்து வருகிறார். இதற்காக மாநகர், மாவட்டத்தில் கட்சியினரை சந்தித்து, விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறணார். அந்த வகையில், நேற்று அன்னதானப்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் நிர்வாகிகளை சந்திக்க இருந்தார். இதற்காக நேற்று காலை, அன்னதானப்பட்டி நான்கு ரோடு துவங்கி தாதகாப்பட்டி வரை, தி.மு.க.,வின் கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டும் பணிகள் நடந்தன. நேற்று காலை, 8:10 மணிக்கு தாதகாப்பட்டி, எஸ்.என்.சி., திருமண மண்டபம் அருகே தொழிலாளர்கள், தி.மு.க., கொடி கம்பிகளை கட்டிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் மேட்டை சேர்ந்த மணிகண்டன், விஜயா தம்பதியரின் மகள் பிரியதர்ஷினி, 12, தன் பெற்றோருடன், அவரது தம்பியை பள்ளியில் விட அழைத்து வந்துள்ளார். அப்போது கொடி கம்பியை எடுத்து சென்ற ஊழியர் திடீரென திரும்பியதால், கம்பி மாணவி பிரியதர்ஷினியின் மூக்கை குத்தி கிழித்தது. ரத்தம் கொட்டிய நிலையில், அவரை அப்பகுதி மக்கள், கொண்டலாம்பட்டி தி.மு.க., பகுதி செயலாளர் முருகன் ஆகியோர் மீட்டு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, தெற்கு சரக சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் கூறியதாவது: கொடி கம்பி குத்தி, சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால், யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.