கோத்தகிரி:'உலக மலைகள் தினம், 11ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், கிராமங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ளது. சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாகவும் விளங்குகிறது.கடந்த, 2002ம் ஆண்டு முதல், ஐ.நா., சபை சார்பில், டிச., 11ம் தேதி, உலக மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, மலைகள் தினத்தை கொண்டாட முடியாத சூழல் நிலவியது. நடப்பாண்டு, உலக மலைகள் தினத்தை முன்னிட்டு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை பெருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமங்களிலும், விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி ஆவண காப்பக மைய நிர்வாகி வேணுகோபால் கூறுகையில்,''மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குக்கிராமங்களும் சிறந்த சுற்றுலா மையங்கள் தான். வரும்,11ல், மலைகள் தினத்தை சுற்றுலாதுறை விழாவாக கொண்டாடினாலும், தன்னார்வ அமைப்புகள் மூலமாக, கிராமப்புறங்களில் விழாவை கொண்டாட வேண்டும். இதனால், மலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படும். கொரோனா காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை கிராமத்திலும் பரிமாற முடியும்,'' என்றார்.