பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நந்தனார் காலனியில், பொது கழிப்பிடம் சீரமைக்க வேண்டும்,' என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, நகர பொறுப்பாளர் ஜெயப்பிரியா மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
நகராட்சிக்கு உட்பட்ட, 10வது வார்டு பகுதியான நந்தனார் காலனியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் துாய்மை பணியாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளாக பொது கழிப்பிடம் சுகாதாரமின்றி காணப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது.
சிறுவர்கள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டியதுள்ளது. ஆனால், முறையாக பராமரிப்பு இன்றி உள்ளது. கழிப்பிடத்தின் அருகே, அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே, கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தையும் மாற்று இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.