பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பள்ளி வளாகத்தில் உள்ள அச்சுறுத்தும் குடிநீர் மேல்நிலைத்தொட்டியை அகற்ற வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், சேர்வைக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார். இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில், கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலைத்தொட்டி அமைந்துள்ளது.
கடந்த, 15 ஆண்டுக்கு முன், மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. ஆன்பின், 2012 --- 2013ல், 66,700 ரூபாய் மதிப்பீட்டில், பராமரிப்பு செய்யப்பட்டது.கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, மேல்நிலைத் தொட்டி மற்றும் கான்கிரீட் துாண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வாரத்தில் இருமுறை மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்படுகிறது.
மேல்நிலைத்தொட்டி உள்ள பள்ளிக்கூட வளாகத்தில், 35 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மாணவர்கள் பாதுகாப்பு கருதி, வேறு இடத்தில் புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்ட வேண்டும். இதற்கு நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேல்நிலைத்தொட்டி கட்டும் பணியை வேகப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற மேல்நிலைத்தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்பது, மக்களின் வேண்டுகோளாக உள்ளது.