கோயம்பேடு ; மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் காய்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையானது.கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறி காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது.கடந்த மாதம் முதல், வரத்து குறைந்து தக்காளி தொடர்ந்து 100 ரூபாய்கு மேல் விற்பனையானது. சென்னைக்கு, 1,110 டன் தக்காளி தேவையுள்ள நிலையில், நேற்று, 650 டன் மட்டுமே வந்தது. இதனால், கிலோ 90 -- 100 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல், பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னைக்கு முருங்கைக்காய் வரத்துள்ளது.ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, முருங்கைக்காய் சீசன். தற்போது,
சீசன் இல்லாத காரணத்தால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து மட்டுமே முருங்கைக்காய் வரத்து உள்ளது. இதில், மஹாராஷ்டிராவில் இருந்து, 500 கிலோவும், குஜராத் இருந்து, 6 டன் முருங்கைக்காயும் வந்துள்ளது.சீசன் காலங்களில், தினமும் 10 லாரி வரத்து இருந்த இடத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும், முருங்கைக்காய் வரத்து உள்ளதால், மஹாராஷ்டிரா முருங்கைக்காய் கிலோ 270 -- 300 ரூபாய்க்கும், குஜராத் 160 -- 180 ரூபாய்க்கும் விற்பனையானது.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'முருங்கைக்காய் சீசன் முடிந்ததால், வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. 'குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, ரயிலில் முருங்கைக்காய் வருகிறது' என்றனர்.