பூந்தமல்லி : பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை ஊராட்சியில், ஆக்கிரமிப்பில் இருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, வருவாய் துறையினர் மீட்டனர்.பூந்தமல்லி ஒன்றியம், நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில், பழமை வாய்ந்த இருளர் குட்டை ஒன்று உள்ளது.
இந்த குட்டையை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கடைகள், வீடுகள் கட்டப்பட்டிருந்தன.ஆக்கிரமிப்பில் இருந்து குளத்தை மீட்க வேண்டும் என, பூந்தமல்லி தாசில்தாருக்கு புகார் அளிக்கப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட குட்டையை ஆய்வு செய்ததில், 40 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, இடத்தை காலி செய்யுமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பூந்தமல்லி வருவாய்த் துறையினர், நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மூன்று, ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம், ஒரு வீடு, 11 கடைகளை, அதிகாரிகள் இடித்து அகற்றினர்.அவ்வூராட்சி மன்ற முன்னாள் அ.தி.மு.க., தலைவர், தனக்கு சொந்தமான இடத்தை அகற்றக்கூடாது என, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் இடித்து, அகற்றினர்.