திருவாலங்காடு : சேதமடைந்த பள்ளி கட்டடத்தின் 'சிலாப்' சாலையில் இடிந்து விழுவதால், அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி, 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் தற்போது 115 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பள்ளியின் கட்டடம், 2019ம் ஆண்டு சேதமடைந்ததால், இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக பள்ளி விடுதியில் செயல்பட்டு வருகிறது.பள்ளிக்கு புது கட்டடம் வேண்டி, பள்ளி சார்பில், முன்மொழிவு, திருவள்ளூர் கலெக்டருக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை கட்டடம் கட்டுவது தொடர்பாக எந்த பணியும் நடக்கவில்லை.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக சேதமடைந்த பள்ளி கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் இடிந்து சாலையில் விழுந்து வருகிறது.நேற்று இரவு கட்டடத்தின் ஒரு பகுதி சாலை ஓரத்தில் இடிந்து விழுந்ததால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், ''அசம்பாவிதம் நிகழும் முன்னர் பள்ளி கட்டடத்தை, 'டெமாலிஷ்' செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும்''என்றனர்.மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 'முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.