ஆனைமலை : ஆனைமலை அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க நிதி கேட்டு, ஊராட்சியினர் முதல்வருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
ஆனைமலை அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில், சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள் குறித்து, ஊராட்சித்தலைவர் அண்ணாதுரை, உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர், கணக்கெடுப்பு நடத்தினர்.கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், மதுரை வீரன் கோவில் வீதி, சர்க்கார் கிணறு வீதி, விநாயகர் கோவில் வீதிகளில், 30 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் சிதிலமடைந்து மேற்கூரைகளின் கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்தும், சுற்றுச்சுவர் சேதமடைந்தும் ஆபத்தான நிலையிலுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், நிலம் மற்றும் வீடுகள் இல்லாதவர்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
'ஆபத்தான நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை அகற்றி, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும், ஓரளவுக்கு பாதித்த வீடுகளை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும். நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர வேண்டும்,' என, வலியுறுத்தி, ஊராட்சியினர் முதல்வருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.