வால்பாறை : வால்பாறை எம்.எல்.ஏ., அலுவலகம், 'குடி'மகன்களுக்கு, திறந்தவெளி 'பார்' ஆக மாறியுள்ளது.
வால்பாறை நகரில் மக்கள் குறைகளை கேட்டறியும் வகையில், எம்.எல்.ஏ., அலுவலகம் கடந்த, 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ.,வாக இருந்த கோவைதங்கம், ஆறுமுகம் ஆகியோர் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி, மக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.அதன் பின், எம்.எல்.ஏ.,வாக இருந்த கஸ்துாரி, ஐந்து ஆண்டுகளாக அலுவலகத்தை திறக்க வில்லை. இந்நிலையில், தற்போதைய எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமியும், இதுவரை அலுவலகத்தை திறக்கவில்லை.
இந்நிலையில், பூட்டியே கிடந்த அலுவலகத்தை சிலர் உடைத்து, மது அருந்தும் திறந்தவெளி 'பார்' போன்று பயன்படுத்துகின்றனர். காலை, 10:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, 'குடி'மகன்கள் அட்ராசிட்டி அதிகரித்துள்ளது. இதனை, போலீசாரும் கண்டு கொள்வதில்லை.
பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் குறைகளை கேட்பதற்காக, எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகம், ஆறு ஆண்டுகளாக திறக்காததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, எம்.எல்.ஏ., அலுவலகத்தை மீண்டும் அழகுபடுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். 'குடி'மகன்கள் கூடாரத்தை, போலீசார் காலி செய்ய வேண்டும்,' என்றனர்.