பூமாலை வணிக வளாகத்தில் 'வாடியது' வர்த்தகம்! ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பூமாலை வணிக வளாகத்தில் 'வாடியது' வர்த்தகம்! ரூ.40 லட்சம் வருவாய் இழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2021
23:23

கோவை : மகளிர் சுய உதவிக்குழுக்களின், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக கட்டப்பட்ட, பூமாலை வணிகவளாகம், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பூட்டியே இருப்பதால், 40 லட்சத்திற்கும் மேல், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்தும், மாவட்ட நிர்வாகம் மவுனம் சாதிப்பது ஏன் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில், நகர்புறத்தில் மட்டும், , 5 ஆயிரத்து 835 குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்களுக்கு நடப்பாண்டில் மட்டும், 864 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்க பயிற்சி அளிக்கப்படுவதோடு, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, டவுன்ஹாலில், 2002ல், மத்திய அரசின் எஸ்.ஜி.எஸ்.ஒய்., (ஸ்வர்ணகார் கிராம் ஸ்வராஜ்கார் யோஜனா) திட்டத்தின் கீழ், வணிக வளாகம் கட்டப்பட்டது. தரைத்தளம், முதல் தளம் என, 22 கடைகள் உள்ளன.

இரண்டாவது தளத்தில், ஆலோசனை கூடம் உள்ளது.அரசு வருவாய் இழப்புகுறைந்த வாடகையில், நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட, இந்த வணிக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தங்களின் பொருட்களை விற்றனர். படிப்படியாக இந்த அரங்குகள், கட்சியினர் வசம் சென்றதால், மகளிர் சுய உதவிக்குழு அல்லாதோர், 2014ல், வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், 2019 வரை, வணிக வளாகம் முழுமையாக செயல்படாமல் மூடப்பட்டது. இதனால், குறைந்தபட்சம் ஒரு கடைக்கு, 3 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டாலும், 40 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், 2019 நவ., மாதம், ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. கொரோனா காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மீண்டும் வணிக வளாகம் மூடப்பட்டது.

வாடகையே வழங்காமல், கடைகள் மூடியே இருந்ததால், மீண்டும் கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. தற்போது நான்கு கடைகள் மட்டுமே செயல்படுகின்றன. மீதமுள்ள, 18 கடைகளும் காலியாகவே உள்ளன. கொரோனா தொற்றுக்கு பின், இயல்பு வாழ்க்கை திரும்பியும், வணிக வளாகம் மூடியே இருப்பதை, மாவட்ட நிர்வாகமும் கருத்தில் கொள்ளாமல், அசட்டையாக உள்ளது.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா கூறியதாவது: வணிக வளாகத்தில், 22 கடைகளில், 10*10 சதுர அடி கொண்ட கடைகள், 6 ஆயிரம் ரூபாய்க்கும், 10*8 சதுர அடி கொண்ட முகப்பு கடைகள், 5 ஆயிரம் ரூபாய்க்கும், பின்புற கடைகள், 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்கு கடைகள் செயல்படுகின்றன. மற்ற கடைகளுக்கு, ஏழு குழுக்களிடம் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன.

கலெக்டர் தலைமையிலான குழுவின் ஒப்புதலோடுதான், கடைகளை வாடகைக்கு விட முடியும். உற்பத்தி குழுக்களுக்கு மட்டுமே, கடைகள் வாடகைக்கு விட வேண்டுமென அரசாணையில் உள்ளதால், தகுதியான குழுக்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. சிறப்பாக செயல்படும் சில குழுக்கள், ஊரக பகுதியில் இருப்பதால், நகரின் மையப்பகுதிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

வணிக கடைகளை விட சொற்ப வாடகையே நிர்ணயித்துள்ளதால், குழுக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் அனைத்து கடைகளும் செயல்பட ஏற்பாடு நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார். பேச்சு நடக்கிறது, நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பாட்டையே தொடர்ந்து பாடாமல், ஆக்கபூர்வமாக செயல்பட்டு மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X