கோவை : கோவையில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், பள்ளி மாணவிகள் தங்களின் முழு திறமையும் வெளிப்படுத்தி அசத்தினர்.
கோவை, சி.சி.எம்.ஏ., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 4ம் ஆண்டு மாநில அளவில், 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி, சி.சி.எம்.ஏ., பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கி, வரும், 11ல் நிறைவடைகிறது. இதில், சேலம், துாத்துக்குடி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'நாக்-அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடக்கிறது.
நேற்று நடந்த முதல் போட்டியில், திண்டுக்கல் என்.எஸ்.வி.வி., அணி, 52-10 என்ற புள்ளி கணக்கில், கோவை பாரதி அணியை வென்றது. இரண்டாவது போட்டியில், சேலம் செயின்ட் ஜோசப் அணி, 63-42 என்ற புள்ளி கணக்கில், சி.சி.எம்.ஏ., 'பி' அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் 'லீக்' தகுதி பெற்றன.