கோவை, : அரசு உத்தரவு வெளியான அடுத்த நாளே, கோவை சிட்கோவிலுள்ள தொழில்மனையை தேர்வு செய்வதற்காக, தி.மு.க.,வினர் குவிந்தனர்.
தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்கள், சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தின.அதை ஏற்ற தமிழக அரசு, சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பித்தது.
அரசாணை வெளியான சூழலில், நேற்று கோவை - பொள்ளாச்சி சாலையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலுள்ள, பல தொழில் மனைகளை, தி.மு.க.,வினர் கும்பல் கும்பலாக கார்களில் வந்து பார்வையிட்டு சென்றனர்.
அவர்களது கைகளில் தொழில் மனையின் வரைபட நகலும் இருந்தது.இது குறித்து, கொசிமா துணைத்தலைவர் நடராஜன் கூறியதாவது: கொரோனா நோய் தொற்று காரணமாக, ஏற்பட்டுள்ள தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில் முனைவோர் மீள, வழிவகை செய்யும் இந்நடவடிக்கையை வரவேற்கிறோம்.
ஆனால் அரசு உத்தரவுப்படி, இந்த சலுகை தொழில்முனைவோருக்கும், சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களை நடத்துபவர்களுக்கும் சரியாக செல்ல வேண்டும். தொழிலகங்கள் நடத்துவோர், தொழில் முனைவோருக்கு மட்டுமே இந்த தொழில் மனையிடங்கள் வழங்கப்பட வேண்டும். ரியல் எஸ்டேட் மாபியாக்களிடம் போய் சேர்ந்து விடக்கூடாது. அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.