கே.கே.நகர் : கே.கே.நகர், சீனிவாசா தெருவில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மெகா பள்ளங்களால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர் 128வது வார்டில் சீனிவாசா தெரு உள்ளது.
இது, கே.கே.நகர் -- வளசரவாக்கத்தை இணைக்கும், முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது.ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, அதை தவிர்த்து செல்ல, ஏராளமான வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இச்சாலை, பல ஆண்டு களாக முறையான பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின்போது, குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்..
தற்போது போக்குவரத்திற்கு லாயக்கற்ற இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதனால், சாலையில் உள்ள பள்ளங்களை சீர்செய்து, தார்ச்சாலை அமைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மழைக்கு முன் தார்ச்சாலை அமைக்க, சீனிவாசா தெரு 'மில்லிங்' செய்யப்பட்டது. மழை காரணமாக பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, மழை ஓய்ந்துள்ளதால், விரைவில் சாலை சீரமைக்கப்படும்' என்றனர்.