ஸ்ரீமுஷ்ணம்:கொரோனா பாதித்து, கறுப்பு பூஞ்சை நோயால் கண்களை இழந்த டிரைவர் குடும்பத்தினர் அரசு உதவியை எதிர்பார்த்து உள்ளனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; லாரி டிரைவர். மனைவி ஜெயந்தி, 12 - 6 வயதில் இரண்டு மகள்கள், 10 வயது மகன் உள்ளனர். ராஜேந்திரன் லாரி டிரைவராக வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வந்தார்.கடந்த மே 3ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11ம் தேதி வீடு திரும்பினார்.
சில நாட்களில் தலையில் அதிக வலி ஏற்பட்டது. மீண்டும் முண்டியம்பாக்கம் மருத்துவமனை யில் சேர்த்து பரிசோதனை செய்ததில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.கடந்த மே 20ம் தேதி புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு 21ம் தேதி கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக இடது கண் நீக்கப்பட்டது. தற்போது வலது கண் பார்வையும் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 4ம் தேதி சிகிச்சை முடிந்து ராஜேந்திரன் வீடு திரும்பினார். அவரது, குடும்பத்தினர் ஏழ்மை காரணமாக மருந்து மாத்திரைகள் வாங்க முடியாத நிலையில் சிரமத்தில் உள்ளனர். இதற்கிடையே அவரது மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஜிப்மர் நிர்வாகம் நியூரோ துறையில் படுக்கைகள் காலியான பின்னரே சிகிச்சையில் சேர்க்க முடியும் என கூறியுள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய நிதி வசதி இல்லாமல் குடும்பத்தினர் சிரமத்தில் உள்ளனர். அவரது பிள்ளைகள் கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ செலவு, பிள்ளைகளின் கல்விக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உதவி செய்ய விரும்புவோர் 97872 84665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.