திருத்தணி ; மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம்பம் மீது தனியார் பஸ் மோதியதில் கம்பம் உடைந்ததால், திருத்தணியில் எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருத்தணி ம.பொ.சி., சாலையில் இருந்து, அக்கைய்யநாயுடு திரும்பும் மாநில நெடுஞ்சாலையோரமுள்ள மின் கம்பத்தின் மீது, நேற்று அதிகாலை தனியார் பஸ் மோதியது.
இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதிகாலை என்பதால் வாகன ஓட்டிகள், மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம்இல்லை.இதனால், திருத்தணி பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி, சென்னை, சித்துார், வேலுார் போன்ற இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மின் வாரிய ஊழியர்கள் வந்து அக்கைய்ய நாயுடு சாலை முழுதும் மின்சாரம் உடனடியாக துண்டித்து,
இரண்டு மணி நேரம் போராடி உடைந்த மின் கம்பத்தை அகற்றினார். பின் போக்குவரத்து துவங்கப்பட்டது.அதை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து, எட்டு மணி நேரம் போராடி புதிய மின் கம்பம் அமைத்தனர். பின், மதியம் 1:30 மணிக்கு வீடு, கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கி, மின் வினியோகம் செய்தனர்.திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.