பெங்களூரு : கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக பி.எம்.டி.சி.,யின், நுாற்றுக்கணக்கான வால்வோ பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில், 860 வால்வோ பஸ்கள் உள்ளன. கொரோனாவுக்கு முன், லாபகரமாக இயங்கிய இந்த பஸ்கள், கொரோனா கால் பதித்த பின், டிப்போக்களில் துாங்க துவங்கின.தொற்று குறைந்து, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதும், பி.எம்.டி.சி., பஸ்கள் போக்குவரத்தும் துவங்கியது.
சாதாரண பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால், வால்வோ பஸ்களில் பயணியர் பற்றாக்குறை உள்ளது.ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், வால்வோ பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்றிருந்தன. கொரோனாவுக்கு பின், அனைத்து ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றுகின்றனர். இதனால் அந்த பஸ்களின் தேவை குறைந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவையும் சிறப்பாக இருப்பதால், வால்வோ பஸ்களில் பயணியர் எண்ணிக்கை குறைந்தது.இதனால், 860 பஸ்களில், 200 மட்டுமே இயங்குகின்றன. 600 பஸ்கள் பல்வேறு டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. நகரின் பல இடங்களிலிருந்து, கெம்பேகவுடா சர்வதேச
விமான நிலையத்துக்கு, தினமும் 20 வால்வோ பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நஷ்டத்தில் இயங்குகின்றன.பி.எம்.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு ஆண்டுகளாக, வால்வோ பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை காலா காலத்துக்கு, பஸ்களை நிர்வகிக்க லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிறது.
இந்த பஸ்கள், பி.எம்.டி.சி.,க்கு சுமையாக உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பஸ் கட்டணத்தை குறைக்குபடி, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.