கோவை:'இரண்டு மெகாவாட் மின்சாரத்தை, உங்கள் வீட்டு மாடியில் உற்பத்தி செய்ய முடியும். உங்கள் அன்றாட மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் உங்களது பெட்ரோல் செலவையும் இது குறைக்கும்; ஆயுள் காலத்துக்கும் எரிபொருளை மிச்சப்படுத்தும்,'' என அடுக்கிக்கொண்டே போகிறார் கஸ்துாரி ரங்கையன்.
வீட்டில் பகலில் மின்சாரத்திற்கான பயன்பாடு மிகவும் குறைவு. பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார வாரியம் எடுத்துக் கொள்கிறது. இந்த மின்சாரம், பகலில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பயன்படும்.மின் கட்டணம் செலுத்துவதில்லைபகலில் அனுப்பிய மின்சாரத்தை, நாம் இரவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். மின்சார வாரியத்தின் மின்கம்பிகள் வழியாக இது கிடைக்கிறது. இரண்டு மின்சாரத்தையும் அளவிட பொதுவான மீட்டரே பயன்படுத்தப்படுகிறது.இந்த மீட்டரில் காட்டும் உற்பத்தி அளவும், பயன்பாட்டு அளவும் கணக்கீடு செய்யப்படுகிறது. பகலில் உற்பத்தி செய்து கொடுக்கப்படும் மின்சாரத்தை, மின்வாரியத்திடமிருந்து இரவில் பெற்று பயன்படுத்துகிறோம்.
மின்சார உற்பத்தி அதிகமாக இருந்தால், அது நமது மின்சார வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். நாம் பயன்படுத்தும் அளவு, இந்த அளவுக்கு மேல் இருந்தால், மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.மாதம் சுமார் 2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்திய நான், கடந்த 2, 3 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்துவதில்லை.
இது, ஒருமுறை முதலீடு!
ஒரு முறை இரண்டு லட்ச ருபாய் செலவு செய்து, சோலார் பேனல் அமைத்து விட்டால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் உற்பத்தியை பெற முடியும். அடுத்தாக, டாடா நெக்ஸான், எலக்ட்ரிக் கார் வாங்க புக் செய்துள்ளேன். 5-- 6 மாதங்களில் இந்த கார் வந்து விடும். தற்போது பயன்படுத்தி வரும் பெட்ரோல் காரை நிறுத்தி விட்டு, சூரிய ஒளியில் பெறப்படும் மின்சாரத்தைக் கொண்டு, சார்ஜ் செய்து கொள்ளப்போகிறேன்.எனது மாதாந்திர பெட்ரோல் செலவு மிச்சமாகி விடும். மாதந்தோறும் 10 ஆயிரம் ருபாய்க்கும் மேல் பெட்ரோலுக்கான செலவு மிச்சம். காரில் பயன்படுத்தப்படும் பேட்டரி 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை இருக்கும்.
மின்சாரமே வேண்டாம்
அதற்குள் இந்த கார் வாங்கிய கணக்கு ஈடுகட்டப்பட்டு விடும். மீண்டும் புதிய காரோ, பேட்டரியோ மாற்றிக் கொள்ள முடியும். இப்படி, எனது சுய தேவைக்கு எரிபொருள் செலவை முற்றிலும் நிறுத்த முடியும்.சோலார் பேனல்களுக்கு இணையாக, சோலார் வாட்டர் ஹீட்டர் ஒன்றையும் அமைத்துள்ளேன். இதிலிருந்து ஆண்டு முழுவதும் சுடுநீர் கிடைக்கிறது. மின்சார செலவு இல்லை. தமிழ்நாட்டில் அடைமழை காலம் 10 - நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. ஆண்டு முழுவதும் நமக்கு கிடைக்கும் சூரிய ஒளி ஒரு வரப்பிரசாதம்.இவ்வாறு, அவர் கூறினார்.இன்று உலக ஆற்றல் சேமிப்பு தினம்!