பவானி : ''அ.தி.மு.க., ஆட்சியில், மூழ்கிப் போன கப்பலாக இருந்த ஆவின் நிறுவனம், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் நீர்மூழ்கி கப்பலாக மாறி வருகிறது,'' என்று, பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.
ஈரோடு அருகே சித்தோட்டில் ஆவின் நிறுவனத்தில், பால் வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் கூறியதாவது:ஆவின் நிறுவனத்துக்கு நேரடி பணி நியமனம் செய்தபோது, கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக இனி ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். கடந்த, 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், ஆவினில் நடந்த பணி நியமனங்கள் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. இதுவரை தவறு கண்டறியப்பட்டு, 700 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். எஞ்சிய, 236 நியமனங்கள் குறித்து விசாரணை நடக்கிறது. ஆவினில் கடந்த ஆட்சியில், 36 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல், தற்போது 41 லட்சம் லிட்டராக உயர்ந்துஉள்ளது. சிங்கப்பூர், மலேசியா, மேற்கத்திய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதியை, மீண்டும் துவங்க முயற்சி நடக்கிறது. கடந்த, ௧0 ஆண்டு ஆட்சியில், மூழ்கி போன கப்பலாக ஆவின் நிறுவனம் இருந்தது. அதை நீர்மூழ்கி கப்பலாக வெற்றிகரமாக மாற்றி, பயணிக்க வைக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் முதல் கட்டமாக தான், அரசுத் துறைகள் அனைத்தும் ஆவின் நிறுவனத்தில் தான் பொருட்களை வாங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.