சென்னிமலை: கொரோனா மூன்றாவது அலை ஊரடங்கு, வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்களை திறக்க தடை ஆகியவற்றால், சென்னிமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேரோட்ட விழா நடக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தைப்பூச தேரோட்ட விழா கருத்து கேட்பு கூட்டம், சென்னிமலையில் நேற்று மாலை நடந்தது. பெருந்துறை தாசில்தார் கார்த்திக் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், சேர்மன் காயத்ரி இளங்கோ, சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் உட்பட அரசு தரப்பில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவில் மண்டப கட்டளைதாரர், நாட்டு மண்டப கட்டளை மற்றும் பல்வேறு சமூக கட்டளை நிர்வாகிகள், திருவிழா உபயதாரர், நன்கொடையாளர், அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கங்கள், கோவிலில் செயல்படும் பல்வேறு கமிட்டி நிர்வாகிகள், தேரோட்ட விழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அவர் உத்தரவின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். தேரோட்ட விழா நடக்குமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.