பவானி: சித்தோட்டில் ஆவின் நிறுவனத்தில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஈரோடு மாவட்ட ஆவின் பால் குளிரூட்டும் நிலைய பணியாளர்கள் நலச்சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில், 52 பால் குளிரூட்டும் தொகுப்பு நிலையங்கள் உள்ளன. குளிரூட்டும் நிலையங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும்போது, ஆவின் நிறுவனத்தில் பாலின் அளவு, தரம், பாலின் காப்பு நேரம் ஆகியவற்றுக்கு, உரிய ஒப்புதல் ரசீது வழங்காமல் சில நாட்கள் கழித்து ரசீது வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கும் ரசீதில், நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கும், ஆவின் குறிப்பிடும் நேரத்துக்கும் வேறுபாடு காணப்படுகிறது. இதனால் தொடக்க நிலை சங்கங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தொடக்க நிலை சங்கங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும். எனவே அருகிலுள்ள மாவட்டங்களை போன்று, ஈரோடு மாவட்டத்திலும் பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து, கொள்முதல் செய்யும்போதே, ஒப்புதல் ரசீதை ஆவின் நிறுவனம் வழங்க வேண்டும். பால் குளிரூட்டும் நிலைய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, லிட்டருக்கு, 50 காசுகளாக உயர்த்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு மதிப்பூதியம் வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு, காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.