கோபி: இந்திய கம்யூ., கட்சி மாநில நிர்வாகக்குழு சார்பில், தியாகசீலர் சுப்பிரமணியத்துக்கு நினைவரங்கம் கட்டும் பணி, கோபி, பதிவிலாஸ் வீதியில் நடக்கிறது. இதன் கட்டமைப்பை திருப்பூர் எம்.பி., சுப்பராயன், இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் அடங்கிய குழுவினர் நேற்று பார்வையிட்டனர். அப்போது முத்தரசன் கூறியதாவது: 'நீட்' விலக்கு சட்ட மசோதா தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு, இ.கம்யூ., முழு ஒத்துழைப்பு அளிக்கும். 'நீட்' நுழைவுத்தேர்வு மசோதாவை, காலம் தாழ்த்தி பரிசீலனையில் வைத்திருப்பது, சட்டசபைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதிக்கும் செயலாகும். இந்நிலை தொடர்ந்தால், கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூற வேண்டிய அவசியம் ஏற்படும். பொங்கல் பரிசு தொகுப்புடன், குறைந்தபட்ச உதவித்தொகை மக்களுக்கு வழங்க வேண்டுமென்று, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.