ஈரோடு: இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், காய்கறி, மளிகை மற்றும் மீன், இறைச்சி வாங்குவோர் கூட்டம், மார்க்கெட்டில் நேற்று எகிறியது. ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டில், அதிகாலை முதலே பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினர். இதனால் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில், அசைவ பிரியர்களின் கூட்டத்தை பார்க்க முடிந்தது. முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான கடைகளின் முன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வட்டம் வரையப்பட்டிருந்தது. அதில் நின்று, காத்திருந்து மீன் வாங்கி சென்றனர். ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. கொங்கலம்மன் கோவில் வீதியில், மொத்த மளிகை பொருள் விற்பனை கடைகளுக்கும் மக்கள் படையெடுத்தனர். ஊரடங்கை சமாளிக்க, வீட்டில் இருந்து வெளியில் வரக்கூடாது என்பதால், வீட்டுக்கு தேவையான உணவு, காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை வாங்க, மக்கள் குவிய நேரிட்டது.