ஈரோடு: ஈரோடு கோட்டை தி.மு.க., செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், கண்ணையன் வீதி மக்கள், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி, 29வது வார்டு ஜெயகோபால் வீதி, கண்ணையன் வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை உள்ளன. இப்பகுதியில் டாஸ்மாக் கடை (எண்:3481) இயங்கி வருகிறது. கடையில் பார் இல்லாததால், சாலையில் அமர்ந்தும், வீட்டு வாசல்களில் அமர்ந்தும் குடிக்கின்றனர். குடியிருப்புவாசிகள் கண்டித்தால், தகாத வார்த்தை பேசி தகராறுக்கு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திலும் குடித்து விட்டு, பாட்டில்களை வீசி செல்கின்றனர். இப்பகுதியில், 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால், பெண்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி, தனியார் மருத்துவமனை இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: மதுக்கடையை அகற்ற, ஆறு ஆண்டாக போராடி வருகிறோம். இப்போது தி.மு.க., ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் அமைச்சரிடமே மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.