ஈரோடு: கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை, அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் துவக்கி வைத்தார். முன் களப்பணியாளர்களான சுகாதாரத்துறையினர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன் களப்பணியாளர்களுக்காக, கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கையில் நல்ல பலன் கிடைப்பது என்பது, மக்களின் ஒத்துழைப்பில் மட்டுமே உள்ளது. தற்போது கொரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம், மொபைல் முகாம், வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. அதேநேரம், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி, முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக துவங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, டி.ஆர்.ஓ., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.