சென்னிமலை: சென்னிமலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊழியர்களிடையே ஏற்பட்ட 'டைமிங்' தகராறால், இரு தரப்புக்கும், நான்கு மணி நேரம் வீணாகி போனது.
பழநியில் இருந்து ஈரோட்டுக்கு, சென்னிமலை வழியாக தினமும் காலையில் அரசு பஸ் செல்கிறது. காலை, 8:00 மணிக்கு சென்னிமலைக்கு வரும். அதேபோல் காங்கேயத்தில் இருந்து, 7:45 மணிக்கு புறப்படும் தனியார் பஸ் சென்னிமலை, அரச்சலூர் வழியாக ஈரோடு செல்லும். இந்த பஸ் சென்னிமலைக்கு, 8:13 மணிக்கு வந்து சேரும். நேற்று காங்கேயத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட அரசு பஸ், 8:10க்கு சென்னிமலை வந்துள்ளது. அப்போது வந்த தனியார் பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோர், தங்கள் நேரத்தில் எப்படி பயணிகளை ஏற்றலாம்? இதுவரை ஏன் புறப்படவில்லை என்று, அரசு டிரைவர், கண்டக்டரிடம் கேட்கவே, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் சென்னிமலை போலீசார், இரண்டு பஸ்களையும் ஸ்டேஷனுக்கு ஓட்டி சென்றனர். இதனால் இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பேச்சுவார்த்தை நடந்த பிறகு, 12:00 மணிக்கு மேல் இரண்டு பஸ்களும் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனால் சென்னிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.