அரும்பாக்கம் : விருகம்பாக்கம் கால்வாயில், 'பிளாஸ்டிக்' மற்றும் குப்பைக் கழிவுகளால் நீரோட்டம் தடைபட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் முக்கிய நீர்வழித்தடங்களாகும்.
இவற்றில் முக்கிய கால்வாய்களில் விருகம்பாக்கம் கால்வாயும் ஒன்று.குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட, 108வது வார்டில், சூளைமேடு அருகில், விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது.நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.நான்கு கி.மீ., துாரம் உடைய இக்கால்வாயை, பருவ மழை முன்னேச்சரிக்கையாக இயந்திரம் வாயிலாக, மாநகராட்சியினர் துார் வாரும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால், மழைக்கு பின், முறையாக சீரமைக்காததால், கால்வாயில் ஆங்காங்கே 'பிளாஸ்டிக்' மற்றும் குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கழிவு நீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.எனவே, 'பிளாஸ்டிக்' கழிவுகளை விரைந்து அகற்றி, சுகாதார பாதிப்பை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.