ஆர்.எஸ்.மங்கலம் : கடும் பனிப்பொழிவால்ஆர்.எஸ்.மங்கலம்பகுதியில், மிளகாய பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ் மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, சிலுகவயல், இருதயபுரம், செங்குடி, எட்டிதிடல், வரவணி, சேத்திடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில், மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சி நிலையை அடைந்து செடிகள் பூக்கும் பருவத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக காலை 9:00 மணி வரை எதிர்வரும் வாகனங்களும், ஆட்களும், தெரியாத வகையில், கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த மூடு பனியால், மிளகாய்ச் செடிகளில் பூத்து வரும் பூக்கள் பனி நீரில், அழுகி செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்து வருகின்றன. மூடு பனியால் மகசூல்பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.