அண்ணா நகர்,-கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, கடந்த 6ம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.ஊரடங்கில், விதிமீறல் கண்காணிக்க சென்னை முழுதும், 300க்கும் மேற்பட்ட இடங்களில், தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.விதிமீறும் வாகன ஓட்டிகளின் வாகனங்களை, பறிமுதல் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.அந்தவகையில், வழக்கு பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், வாகன உரிமையாளர்கள் காலை முதல் இரவு வரை காவல் நிலையத்திலேயே காத்திருந்து, வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செல்வாக்கை பயன்படுத்தி வாகனங்களை எடுத்து செல்கின்றனர். ஆனால், ஏழை எளியோர் வாகனங்கள் கிடைக்காமல், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது :ஊரடங்கு விதிமீறலில் ஈடுபடுவோரிடம், வாகனங்களை பறிமுதல் செய்ய மட்டுமே உத்தரவிடப்பட்டது. ஆனால், வாகனங்கள் ஒப்படைப்பது குறித்து, எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதை புரிந்து கொள்ளாத உரிமையாளர்கள் தினமும் காவல் நிலையங்களில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். வாகனங்கள் ஒப்படைப்பது தொடர்பாக அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.