சென்னை-சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பு மற்றும் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்கள் அமைக்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி சார்பில், தங்கு தடையின்றி போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை - குக்ஸ் சாலை - பிரிக்ளின் சாலை; கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை இடையே மேம்பாலங்கள் அமைக்க, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.கணேசபுரம் சுரங்கப்பாதை, வடசென்னை வியாசர்பாடி பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக உள்ளது. தற்போதைய சுரங்கப்பாதை மையத்தடுப்பு இல்லாத இருவழி பாதையாகும். இந்த சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்பட உள்ள, புதிய மேம்பாலம், 142 கோடி ரூபாய் மதிப்பில், 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்தில், இருபுறமும் பயணிக்கும், நான்கு வழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது.கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலை - குக்ஸ் சாலை - பிரிக்ளின் சாலை சந்திப்பானது, ஓட்டேரி நல்லா கால்வாய் பாலத்தில் சந்திக்கிறது. கொன்னுார் நெடுஞ்சாலை வில்லிவாக்கத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சந்திப்பில், கொன்னுார் நெடுஞ்சாலை - ஸ்ட்ராஹன்ஸ் சாலையை இணைக்கும் வகையில், இருபுறமும் பயணிக்கும் இருவழிப்பாதை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மேம்பாலம், 62 கோடி ரூபாய் செலவில், 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலை இடையே, 131 கோடி ரூபாய் செலவில், 120 மீட்டர் நீளத்துக்கு, 8.4 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது.இந்த மூன்று மேம்பாலம் கட்ட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதியும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கு, 335 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதால், பணிகள் விரைந்து துவங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.