சென்னை எண்ணுார் பர்மா நகரிலும், வியாசர்பாடியிலும் பர்மா தமிழர்கள் அதிகம். இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தோ, லேத்தோ, வாழைத்தண்டு சூப், முட்டை மசாலா போன்ற உணவுகள், சென்னை வாசிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் பிரசித்தம் அடைந்துள்ளது.
இந்த உணவு வகைகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த பட்டியலில், மற்றொரு வகை தான், 'பர்மா மோலாசம்!'எண்ணுாரைச் சேர்ந்த அமுதா என்பவர், 'பர்மா மோலாசம்' எனும் குளிர்பான வகையை தயாரித்து, விற்கிறார். குளிர்பானமாக மட்டுமின்றி, பசியையும் தீர்க்கிறது இது. இதனால், பர்மா மோலாசம் அருந்த வாடிக்கையாளர் அதிகரித்து வருகின்றனர்.இது குறித்து அமுதாவிடம் கேட்டோம். கைப்பக்குவம், பார்முலா குறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல், செய்முறையை மளமளவென விவரித்தார். கவுனி அரிசி, பச்சரிசி மற்றும் கல்யாண முருங்கையை வேகவைத்து, இளஞ்சூட்டில் இதற்கென உள்ள பானையில் கிளற வேண்டும். கூழ் பதம் வந்த பின், பூந்தி போடுவது போல், அந்த கலவையை அரிசி வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும்.தேங்காய் பால் தனியே தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம், பாதாம் பிசின், தேன் மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்றவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். குளிர்பானமாக கேட்பவர்களுக்கு, அரிசி போல் இருக்கும் கலவை ஒரு கரண்டி, தேங்காய் பால் இரண்டு கரண்டி சேர்த்து, சிறிதளவு பாதாம் பிசின், தேன், சர்க்கரை கலந்த தண்ணீரை கலந்து, ஐஸ் போட்டு பரிமாற வேண்டும். நான் ஒரு கண்ணாடி கிளாஸில் கொடுக்கிறேன்.
விலை 10 ரூபாய். வேக வைத்த அரிசியால் பசி அடங்கும். தேங்காய் பாலால் வாய் மற்றும் வயிற்றுப் புண் ஆறும். கலவையாக குடிப்பதால், குளிர்பானம் குடிக்கும் மன நிலை தோன்றும். செய்முறையை விவரித்த கையோடு, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி, அவர்களிடம் சுவை குறித்து கருத்து கேட்கிறார் அமுதா. 'சூப்பர்' என்ற பதிலால், அமுதாவின் முகம் பிரகாசமடைந்தது.