ஆண்டிபட்டி-ஆண்டிபட்டி பகுதியில் இலை கருகல் நோயால் கொட்டை முந்திரி செடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்டிப்பட்டி தாலுகாவில் ஜி.உசிலம்பட்டி, மொட்டனூத்து, எம்.சுப்புலாபுரம், கணேசபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு, வருஷநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில் பெய்த மழையால் தற்போது கொட்டை முந்திரியில் பூக்கள், பிஞ்சுகள் காய்க்க துவங்கி உள்ளது. மார்ச், ஏப்ரலில் கொட்டை முந்திரி செடிகளில் அதிக பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு தற்போது செடிகளில் ஏற்பட்டுள்ள இலை கருகல் நோய் கவலை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: தற்போது இரவில் பனி,பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் கொட்டை முந்திரி செடிகளில் இலை கருகல் நோய் ஏற்படுகிறது. செடிகளில் உள்ள இலைகள் பழுப்பு நிறமாக மாறி சில நாட்களில் உதிர்கிறது. மருந்து தெளித்தும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் அதிகம் இருப்பதால் விளைச்சல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.