மூணாறு--மூணாறில் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் ரோடு சீரமைப்பு பணிகளுக்கிடையே சேதமடைந்ததால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இந்த ரோட்டில் காலனி ரோடு அருகே ஓடையில் கட்டிய தடுப்பு சுவர் 2020ல் பெய்த கனமழையில் சேதமடைந்தது. இதனால் பொறியியல் கல்லுாரி செல்லும் ரோடு ஆபத்தாக காணப்பட்டது. சீரமைக்க பொதுப்பணித்துறை ரூ.25 லட்சம் ஒதுக்கியது. சீரமைப்பு பணி 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் எடுத்தபோது ரோடு சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வழியில் பொறியியல் கல்லூரி, போலீஸ் ஆயுத படை பிரிவு, குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். தவிர நகரில் சுப்பிரமணியசுவாமி கோயில் செல்லும் ரோட்டில் பாலம் அகற்றப்பட்டதால் பக்தர்கள் பொறியியல் கல்லுாரி ரோட்டை பயன்படுத்தி வந்தனர். வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரோடு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.