கூடலூர்--முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் 181வது பிறந்தநாள் விழா லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின் 181 வது பிறந்தநாள் விழா, லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பென்னிகுவிக் சிலைக்கு தேனி கலெக்டர் முரளீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிப்பட்டி), சரவணகுமார் (பெரியகுளம்) தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு உள்பட விவசாய அமைப்பினர், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொங்கல் வைக்கப்பட்டது.பன்னீர் செல்வம் மரியாதைமேலும் லோயர்கேம்ப் மணிமண்டப பென்னிகுவிக் சிலைக்கு அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் கூறுகையில், ''தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணிமண்டபம் கட்டி, 2013ல் திறப்புவிழா காணப்பட்டது அ.தி.மு.க., ஆட்சியில்தான். அதேபோல் தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு பென்னிகுவிக் பெயர் சூட்டியதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் பென்னிகுவிக் கல்லறை சேதமடைந்தபோது அதை சீரமைத்தது அ.தி.மு.க., அரசுதான்'' என்றார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் உடனிருந்தார்.