போடி--முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்தநாளை மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணையை பென்னிகுவிக் கட்டினார். இவர் ஜன.,15ல் பிறந்தார். இவரது பிறந்தநாளை மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.தேனி பங்களாமேடு கர்னல் ஜான் பென்னிக்குவிக் குடியிருப்போர் நலச்சங்கத்தில் நடந்த விழாவுக்கு தலைவர் மணிவண்ணன், செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் மன்னார்சாமி தலைமை வகித்தனர். பொதுப் பணித்துறை பொறியாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். தொழில் உரிமையாளர் ராஜசேகர் விழாவை துவக்கினார். பொங்கல் வைத்து பென்னிக்குவிக் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.* போடி அருகே பாலார்பட்டி கிராமத்தில் நேற்று பெண்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக பென்னிகுவிக் நினைவு மண்டபம் வந்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேங்காய் உடைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். கர்னல் பென்னிகுவிக் எழுச்சிப் பேரவை தலைவர் ஓ.ஆண்டி கூறுகையில்,''ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகமுல்லைப் பெரியாறு அணையை பல சோதனை கடந்து பென்னிகுவிக் கட்டினார். இதனால் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை பொங்கல்வைத்து கொண்டாடிவருகிறோம்'' என்றார்.* கம்பத்தில் ம.தி.மு.க., சார்பில் பென்னிகுவிக் படத்துக்கும், லோயர் கேம்பில் உள்ள மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.* காமயகவுண்டன்பட்டி காந்தி மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் சிலைக்கு ஓய்வூதியர் சங்க தலைவர் அரங்கசாமி, நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* அனுமந்தன்பட்டியில் நெற்றிக்கண் நுகர்வோர் சங்கம் சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில் பென்னிகுவிக் படத்தை மலர்களால் அலங்கரித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சுருளிப்பட்டி ஆற்றுப்பாலத்தில் ஆண்டுதோறும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் நேற்று விழா ரத்து செய்யப்பட்டது.